Thursday, December 27, 2012

மகரந்தக் காதல்

காலமெல்லாம் உனக்காக, கால் கடுக்க நின்றிருந்தேன்,
கல் மனசுக் காரி, கால் மணி நேரம் கூட பாக்கலியே
காத்தடிச்சா திரும்பிக்குற, மழை வந்தால் சுருண்டுக்கற
என்ன செய்து உன்ன என் பக்கம் சேர்க்க, ஒண்ணுமே புரியவில்லை

நானும் உன்னைப் போலவே இருக்கிறேன் என்று கர்வம் கொள்வேன்
நீ ஒருவேளை, இவன் தானே என்று கண்டு கொள்ளவில்லையோ
என்ன என்னவோ எண்ணங்கள் தோன்றுகின்றன நெஞ்சுக்குள்(மனதிற்குள்)
பஞ்சு பஞ்சாய் வெடித்தேன் என் எண்ணங்களை , வடித்தேன் என் வண்ணங்களை

எப்போதும் வீசும் கருணையற்ற காற்று காணாமல் போனது இப்போது
மருகினேன், உருகினேன் என் காதல் உன்னை சேரவில்லை வாடினேன்
உயிர் அணுவை அணு அணுவாய் வெடித்தேன், உன்னை சேர்வதற்கு
மயிர் இழையில் என் உயிர் காதல் நொடிந்து விழுந்தது நாதி அற்று

சோகம் சூழ மோகம் போக, ஊருக்காக சிரித்து காலம் தள்ளினேன்
புதியவள், எங்கிருந்தோ வந்தாள் இளைப்பாற இடம் வேண்டும் என்றாள்
மௌனமாய் நின்றேன் எல்லாம் எனக்குத் தெரியும் என்றாள், வியந்தேன்
ரீங்காரம் செய்தாள், என்னுள் சிருங்காரம் செய்தாள்

என்னை முழுவதும் தெரிந்தவள் போல, என் காதல் அணுவை எடுத்தாள்
பறந்து சென்றாள், விரைந்து சென்றாள், என்னவளை கட்டி அணைத்தாள்
முத்தம் கொடுத்தாள், சற்று பொறாமை பட்டேன், பரவாயில்லை விட்டு விட்டேன்
என் காதலை அவளிடம் கொண்டு சேர்த்தாள், என்னவள் நாணிச் சிரித்தாள்

ஒன்றும் நடக்காதது போல் மீண்டும் பறந்தாள் புதியவள்
எங்கள் காதலை சேர்க்க வெகு தொலைவு வந்தாள்
மீண்டும் பல காதல் மலர்களை ஒன்று சேர்க்க பறக்கிறாள்
மகரந்தக் காதலின் தூதுவள், புதியவள் என்ற தேனீ...

No comments: